அல்லாஹ்வுக்காக நேசியுங்கள்..!

நான் உன்னை நேசிக்கிறேன்.. இதன் பொருள் என்ன?

நீ என் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பதால், அல்லது, நீ அழகாக இருப்பதால், அல்லது நீ எனக்கு உதவியதால், நான் உன்னை நேசிக்கிறேன் என்பதா? எத்தனை பேர், உண்மையிலேயே அல்லாஹ்வுக்காக நேசிக்கிறார்கள்?

நம் மனதால் கணக்கிடக் கூட முடியாத அளவு நற்கூலிகள் அல்லாஹ்வுக்காக நேசிக்கும்போது கிடைக்கிறது. ஆனால், துரதிருஷ்டவசமாக, பல முஸ்லிம்களிடையே இப்பழக்கம் மறைந்து விட்டது. அதனால், இன் ஷா அல்லாஹ், ஒருவரை அல்லாஹ்விற்காக நேசிப்பதென்றால் என்ன என்பதை அறிந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட ஹதீஸ்களின் மூலமாக உற்சாகம் பெற்று, மற்றவர்களை இந்த அருள்வளமிக்க வழியில் நேசிக்கத் தொடங்குவோம்.

இவ்வார மைய வசனத்தில் அல்லாஹ் (சுபஹ்), அன்ஸார்களின் சகோதரத்துவத்தைப் பற்றி கூறுகிறான். “இன்னும் சிலருக்கும் (இதில் பங்குண்டு; அவர்கள் மதீனாவில் முஹாஜிர்களுக்கு) முன்னரே ஈமானுடன் வீட்டை அமைத்துக்கொண்டவர்கள்; அவர்கள் நாடுதுறந்து தங்களிடம் குடியேறி வந்தவர்களை நேசிக்கின்றனர்; அன்றியும் அவ்வாறு குடியேறிவர்களுக்குக் கொடுக்கப்பட்டதிலிருந்து தங்கள் நெஞ்சங்களில் தேவைப்படமாட்டார்கள்; மேலும், தங்களுக்குத் தேவையிருந்தபோதிலும், தங்களைவிட அவர்களையே (உதவிபெறுவதற்குத் தக்கவர்களாகத்) தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள் – இவ்வாறு எவர்கள் உள்ளத்தின் உலோபித்தனத்திலிருந்து காக்கப்பட்டார்களோ, அத்தகையவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்.. [அல் குர்’ஆன் 59:9]

“அல்லாஹ்வுக்காக” நேசிப்பது என்றால் உண்மையில் என்ன?

அல்லாஹ்வுக்காக ஒருவரை நேசிப்பதில் இரு வகை: உங்கள் மனதில் அல்லது உங்கள் செயல்களின் மூலமாக. நீங்கள் அல்லாஹ்வுக்காக ஒருவரை நேசிப்பது அவருக்கு அல்லாஹ்விடம் உள்ள நெருக்கத்தினால் என்றால், அது நபிமார்கள், ரசூல்மார்களில் தொடங்கி அவர்களைப் பின்பற்றும் அனைவரிடமும் தொடரும். இந்த அன்பு தான் முஸ்லிம்கள் மீது உங்கள் உள்ளத்தில் இருக்க வேண்டும். வெளிப்படையாக, செயல்கள் மூலமாக என்பது, அவர்கள் செய்யும் நற்செயல்களுக்கு ஆதரவளிப்பது, அவர்களை மதித்து, அவர்கள் செய்யும் நற்செயல்களுக்கு ஏற்றாற்போல் பாதுகாப்பு அளிப்பது.

இதன் பொருள், நீங்கள் அவர்களை நேசிப்பதற்கு காரணம், அவர்கள் உங்களுக்குத் தெரிந்தவர்கள் என்பதால் அல்ல, அல்லது, அவர்கள் உங்களுக்கு உதவினார்கள் என்பதல்ல, அல்லது அவர்கள் அழகான தோற்றமுடையவர்கள் என்பதற்காக அல்ல – மாறாக, அல்லாஹ்வின் திருப்தியை நாடி அவர்கள் செய்யும் முயற்சிகளே!

சம்பாதிக்க வேண்டிய 4 பெரும் வெகுமதிகள்

1.ஈமானின் இனிமையை சுவையுங்கள்.

இவ்வுலகத்தின் விலைமதிக்க முடியாத வெகுமதியில் தொடங்குவோம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; ‘எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார் . ( அவை ) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரிய வராவது, ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறைநிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார். [புகாரி, முஸ்லிம்]

இவ்வுலகில் உள்ள அனைத்தையும் விட மிகவும் அருமையானது ஈமானின் இனிமை தான் என்பதை நாம் உணர வேண்டும்.

2.அல்லாஹ்வுடைய நிழலை அனுபவியுங்கள்.

இப்போது, நியாயத் தீர்ப்பு நாளுக்கு நகருவோம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ் (சுபஹ்) கூறுவான், ‘எங்கே என்னுடைய மகத்துவத்திற்காக ஒருவரை ஒருவர் நேசித்தவர்கள்? இன்று, என்னுடைய நிழலைத் தவிர வேறு நிழலில்லாத ஒரு நாளில், நான் அவர்களுக்கு நிழல் தருகிறேன்.’’[முஸ்லிம்]

அங்கே இருக்கும்போது தான் அந்த நிழலின் மிக அவசியமான தேவையே நீங்கள் உணருவீர்கள். அல்லாஹ்வுக்காக ஒருவரை நேசித்ததற்காக மட்டும் அது கிடைக்கும் என்றால், இப்போதே அதற்காக பணியாற்றுங்கள்!

3.நபிமார்களும், அல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் எய்தியவர்களும் உங்களைப் பார்த்து பொறாமைப் படுவார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தூயோனான அல்லாஹ் கூறினான்: என்னுடைய மகத்துவத்திற்காக ஒருவரையொருவர் நேசித்த இருவருக்கு, (நியாயத் தீர்ப்பு நாளன்று) ஒளியாலான அமருமிடங்கள் இருக்கும். அவர்கள் நபிமார்கள் மற்றும் வீரமரணம் எய்தியவர்களால் பொறாமைப் படப்படுவார்கள்”. [திர்மிதி] மற்றவர்களை அல்லாஹ்விற்காக மட்டுமே நேசிப்பதற்கு முன்னுரிமை கொடுத்ததற்காக, மிகச் சிறந்தவர்களில் சிறந்தவர்கள் உங்களைப் பார்த்து பொறாமைப் படும்படியான ஒளியாலான அமருமிடங்களில் நீங்கள் அமர்ந்திருப்பதை கற்பனை செய்து பாருங்கள்!

4.அல்லாஹ்விடம் உங்களுக்கு உயர்ந்த அந்தஸ்தை பெறுவீர்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு மனிதர் மற்றொரு ஊரில் வசிக்கும் தன் (மார்க்க) சகோதரரைப் பார்ப்பதற்காக பயணம் புறப்பட்டார். அவருடைய வழியில் அல்லாஹ் ஒரு வானவரை அனுப்பினான். அம்மனிதர் வானவரைச் சந்தித்த போது, அவர் கேட்டார்: ‘நீர் எங்கே செல்கிறீர்?’ என்று. பின்னவர், ‘நான் இன்ன ஊரில் உள்ள என் சகோதரனைச் சந்திக்கச் செல்கிறேன்.’ என்று பதில் கூறினார். வானவர், ‘அவருக்கு நீர் ஏதாவது உதவியிருக்கிறீரா?’ என கேட்டார். அவர், ‘இல்லை, நான் அவரைப் பார்க்கச் செல்வது, அல்லாஹ்(சுபஹ்)விற்காக அவரை நேசிக்கிறேன் என்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை.’ என்றார். அதற்கு அந்த வானவர், ‘நீர் அவரை (அல்லாஹ்விற்காக) நேசிப்பது போல் அல்லாஹ்வும் உம்மை நேசிக்கிறான் என்பதை உம்மிடம் கூறுவதற்கு அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள தூதர் நான்”.’[முஸ்லிம்] இது வியப்பாக இல்லை? அல்லாஹ்விற்காக ஒருவரை நேசிப்பதினால், மிகவும் உயர்ந்தோனாகிய அல்லாஹ்வுடைய நேசத்தைப் பெறுகிறீர்கள். அவனுடைய நேசத்தை விட சிறந்த நேசம் வேறென்ன இருக்க முடியும்?

ஒருவரை அல்லாஹ்வுக்காக நேசிப்பது எப்படி?

1. மற்றவர்களிடம் பொறுமையாக இருங்கள், தூய உள்ளத்திற்காக கடுமையாக முயலுங்கள். மற்ற விசுவாசிகளுடன் உங்களுக்குள்ள உறவில் ஒவ்வொரு சொல்லிலும், செயலிலும் குற்றம் கண்டுபிடிக்க முயலாதீர்கள். சுயநலமாக இல்லாமல், மன்னிப்புகளை விரைவாக ஏற்றுக்கொள்ளுங்கள். பொதுவான விஷயம் என்னவென்றால், அதிகமாக மார்க்கத்தைப் பேணத் தொடங்குபவர்களுடைய உள்ளத்தில் மற்றவர்கள் மீது வெறுப்பு அதிகரிக்கிறது. பிறரிடம் உள்ள நல்லவைகளைப் பார்க்க முயலுங்கள். அவர்களுடைய குறிப்பிட்ட சொற்கள் அல்லது செயல்களுக்கு நல்ல விளக்கம் அல்லது அர்த்தத்தை கண்டுபிடிக்க முயலுங்கள்.

2. மற்றவர்களுக்குத் தேவையான நேரங்களில் நம்பகத்துக்குரிய மனிதராக இருங்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விசுவாசிகள், தங்களுடைய பரஸ்பர நட்பு, கருணை, அன்பு இவற்றில் ஒரு உடலைப் போன்றவர்கள். உடலில் ஒரு பாகத்தில் வேதனை ஏற்பட்டால், மற்ற பாகங்களும் வலியை உணரும். [புகாரி, முஸ்லிம்]. இந்த ஹதீஸை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம், ஆனால், உண்மையாக இதைப் பற்றி சிந்திக்க முயலுங்கள். மற்ற விசுவாசிகளின் வேதனைகளை நீங்கள் உண்மையிலேயே உணருகிறீர்களா? அது உங்களைப் பாதிக்கிறதா? ஏனென்றால், அது தான் உங்களுக்கு மற்றவர்கள் மேல் உள்ள உண்மையான அன்பின் அடையாளம்!

தன் நண்பனுக்கு கடன் கொடுத்து விட்டு அழுது கொண்டே வீட்டிற்கு சென்ற ஒரு மனிதனின் உதாரணம் உள்ளது. அவருடைய மனைவி அவர் ஏன் அழுகிறார், அந்த பணம் அவருக்கே தேவையாக இருக்கிறதா என கேட்டபோது, அவர், ‘இல்லை, நான் என் மார்க்க சகோதரின் நிலையை எண்ணி அழுகிறேன். அவர் என்ன சிரமத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என நான் எப்படி அறியாமல் இருந்திருக்கிறேன்? நான் அறிந்திருந்தால், அவர் என்னிடம் கேட்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டதை விட நானே உதவியிருப்பேன்.’ என்று கூறினார்.

அவர் தன் நண்பன் பெருமூச்சு விடுவதைப் பார்த்திருக்கிறார், ஏதோ கவலையில் இருக்கிறார் என்று தெரிந்திருந்தும், கேட்காமல் இருந்தது தான், அவர் அழுததற்கு காரணம். தன்னுடைய மார்க்க சகோதரர் தன்னிடம் கடன் கேட்கும் வேதனையான நிலையில் இருந்ததைத் தன்னால் தடுக்க முடியவில்லையே என்று இந்த சகோதரர் அழுகிறார்!

3. மற்றவர்களிடம் நீங்கள் அல்லாஹ்வுக்காக அவர்களை நேசிப்பதாகக் கூறுங்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களில் ஒருவர் தன்னுடைய சகோதரனை நேசித்தால், அதை அவரிடம் அறிவியுங்கள்.’[திர்மிதி]

செயல்: அல்லாஹ்விற்காக நீங்கள் நேசிக்கும் மனிதர்களிடம், أحبك في الله –உஹிப்புக ஃபில்லாஹி (பெண்பால்: உஹிப்புகி ஃபில்லாஹி) என்று கூறி இந்த சுன்னத்திற்கு புத்துயிர் கொடுங்கள். பொருள்: அல்லாஹ்விற்காக நான் உன்னை நேசிக்கிறேன். பன்மை: أحبكم في الله – உஹிப்புகும் ஃபில்லாஹி (ஆண்கள் அல்லது ஆண்களும், பெண்களும் கலந்த குழு), اللأحبكنّ في ه உஹிப்புகுன்ன ஃபில்லாஹி (பெண்கள் அடங்கிய குழு)

யாராவது (ஆணாக இருந்தால்)உங்களிடம் உங்களை அல்லாஹ்வுக்காக நேசிக்கிறேன் என கூறினால், أَحَبَّكَ الَّذِي أَحْبَبْتَنِي لَهُஅஹப்பக்கல்லதீ அஹ்பப்தனீ லஹு அல்லது பெண்ணாக இருந்தால், ‘அஹப்பகல்லதீ அஹ்பப்தினீ லஹு’ – பொருள்: யாருக்காக நீ என்னை நேசிக்கிறாயோ, அதற்கு பதிலாக, அவன் உன்னை நேசிக்கட்டும். [அபு தாவூது]

அதனால், அல்லாஹ் அஸ்ஸவஜலிடம் அவனுக்காக மற்றவர்களை நேசிக்க உதவும்படி கேளுங்கள். இப்போதே செயலில் இறங்குங்கள். அல்லாஹ்வுக்காக நீங்கள் விரும்பும் யாரையாவது அழைத்து அல்லது குறுஞ்செய்தி அனுப்பி, மேலேயுள்ளவற்றை கூறுங்கள்.

குர்ஆனைப் படித்து, புரிந்து கொள்வதற்கு நீங்கள் காட்டும் ஆர்வத்திற்காக நான் உங்களிடமிருந்தே ஆரம்பிக்கிறேன் – உஹிப்புகும் ஃபில்லாஹி – நான் உங்களை அல்லாஹ்வுக்காக நேசிக்கிறேன்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s