வெயிலுக்கு டாட்டா வீட்டுக்குள்ளே கலாட்டா! 03

நிறங்களைக் கண்டுபிடி!

கண்களைக் கட்டி விளையாடும் விளையாட்டு இது.

இரண்டு நிறங்களில் நான்கு பிளாஸ்டிக் பந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள். (உதாரணம்: இரண்டு மஞ்சள், இரண்டு சிவப்பு)

இரண்டு கூடைகளை எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு கூடையிலும் வெவ்வேறு நிறப் பந்துகளைப் போட வேண்டும்.

ஒருவர் கண்களைக் கட்டிவிட்டு, ஆட்டத்தை ஆரம்பியுங்கள். ஆடுபவர், இரண்டு கூடைகளிலும் ஒரே நிறப் பந்துகள் வருவது போல மாற்றிப் போட வேண்டும்.

யாரெல்லாம் சரியாகப் போடுகிறார்களோ, அவர்கள் வின்னர்ஸ்.

மூன்று, நான்கு நிறங்களில் பந்துகளையும் கூடைகளையும் எடுத்துக்கொண்டால், ஆட்டம் இன்னும் த்ரில்லாக இருக்கும். சரியான நிறங்களைப் போட்ட பந்துகளின் அடிப்படையில் பாயின்ட் கொடுத்தும் பல கட்டங்களாக விளையாடலாம்.


உருவம் மாறுவோம்!

செம ஜாலியான விளையாட்டு. ஆனால், வீட்டுப் பெரியவர்களிடம் அனுமதி வாங்கிக் கொள்ளுங்கள். எடுக்கும் பொருட்களை ஒழுங்காக அதே இடங்களில் வைத்துவிட வேண்டும். என்ன இவ்வளவு பில்டப்?

துண்டுத்தாள்களில் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டியின் பெயர்களை எழுதிக்கொள்ளவும்.

நடுவராக இருக்கும் ஒருவர் அவற்றைக் குலுக்கிப்போட, ஆளுக்கு ஒரு சீட்டு எடுக்கவும்.

தங்களுக்கு என்ன பெயர் வந்திருக்கிறது எனப் பார்க்கவும். நடுவர் 1, 2, 3 எனச் சொல்ல ஆரம்பிப்பார். அவர் 50 (அல்லது எத்தனை எண் வரை என்பதை முடிவுசெய்துகொள்ளுங்கள்) சொல்லி முடிப்பதற்குள், உங்களுக்கு வந்த பெயருக்கு ஏற்றபடி வர வேண்டும்.

அப்பா என்றால், அவரது பேன்ட் அல்லது சட்டை, லுங்கியை அணிந்து வர வேண்டும். அம்மா என்றால், சேலை அல்லது துப்பட்டாவை மேலே போட்டுக்கொண்டு வரலாம். யார் எந்த அளவுக்கு சிறப்பாக மாறி வருகிறார்களோ, அவர் வின்னர்.

மீண்டும் குலுக்கல் போட்டு, அந்த நபர் சம்பந்தமான பொருளை (ஹேண்ட்பேக், மூக்குக்கண்ணாடி, பர்ஸ்) எடுத்து வர வேண்டும்.

இப்படி மீண்டும் மீண்டும் விளையாடலாம். ஒருவர் கொண்டுவந்த அதே பொருளை, அடுத்த முறை பெயர் வந்தவர் கொண்டுவரக் கூடாது.


ஆடு… மாடு… காடு!

பத்துக்கும் மேற்பட்ட நண்பர்கள் சேர்ந்து விளையாடினால், செம ஜாலியாக இருக்கும்.

அனைவரும் வட்ட வடிவில் அமர வேண்டும். முதலில் ஒருவர், கூட்டத்தில் உள்ள இன்னொருவரைக் கை காண்பித்து, ‘ஆடு’ எனச் சொல்ல வேண்டும்.

கை காட்டப்பட்டவர், மற்றொருவரைப் பார்த்து, ‘மாடு’ எனச் சொல்ல வேண்டும். மூன்றாம் நபர், வேறொருவரைப் பார்த்து, ‘காடு’ எனச் சொல்ல வேண்டும்.

நான்காம் நபர், இன்னொருவரைப் பார்த்து, ‘ஆடு’ எனச் சொல்ல வேண்டும். இப்படியாக ஒருவர் மாற்றி ஒருவர் வேகமாகச் சொல்ல வேண்டும். வார்த்தையின் வரிசை மாறக் கூடாது. ஆடுக்கு அடுத்து ‘காடு’ எனச் சொல்லிவிட்டால் அவர் அவுட். கூட்டத்தைவிட்டு விலகிவிட வேண்டும். கடைசியில் மிஞ்சும் ஒருவர்தான் வின்னர்.

உங்களுக்குப் பிடித்தவாறு அந்த மூன்று வார்த்தைகளை ஜாலியாக வைத்துக்கொள்ளலாம். ஆனால், எளிதில் குழப்புவது போல ‘கிங்… காங்… பாங்’, ‘கண்ணு… மண்ணு… பொண்ணு’ என ஒரே ஒலிக்குறிப்பில் இருப்பது முக்கியம்.


காசு வேட்டை!

ஒரு ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய் நாணயங்கள் நிறைய சேகரித்துக்கொள்ளவும்.

பங்கேற்பாளர்கள் அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு, ஒருவர் நாணயங்களை அறையின் வெவ்வேறு இடங்களில் ஒளித்துவைக்கவும்.

‘ஸ்டார்ட்’ சொன்னதும், அவர்கள் வந்து நாணயங்களைத் தேட வேண்டும். 3 நிமிடங்களே அவகாசம். அதற்குள், ஒவ்வொருவரும் கண்டுபிடிக்கும் நாணயங்களின் மொத்த மதிப்பைக் கூட்டி, குறித்துக்கொள்ள வேண்டும்.

யார் அதிக மதிப்பில் நாணயங்களைச் சேகரித்தாரோ, அவர் ஒளித்துவைக்க, மற்றவர்கள் தேட வேண்டும்.

இப்படி, குறிப்பிட்ட நேரம் விளையாடுங்கள். முடிவில், யார் அதிக மதிப்பில் நாணயங்களைக் கண்டுபிடித்தாரோ, அவரே வின்னர்.


துண்டு துண்டா விளையாடு!

இது ஒரு குழு விளையாட்டு. ஒரு குழுவுக்கு ஐந்து பேர் இருக்க வேண்டும். மூன்று அல்லது நான்கு குழுக்கள் விளையாடலாம்.

எத்தனை குழுக்கள் விளையாடுகிறீர்களோ, அத்தனை வண்ணங்களில் சார்ட் எடுத்து, சமமான துண்டுகளாக கத்தரிக்க வேண்டும். (ஒரு சார்ட்டை 20 துண்டுகளாகக் கத்தரிப்பது நல்லது)

கத்தரித்த துண்டுகளை ஓர் அட்டைப் பெட்டியில் போட்டு நன்றாகக் குலுக்கி, ஹாலின் நடுவில் மேஜை மீது வைக்கவும். எந்ததெந்த குழுவுக்கு எந்த நிறம் என முடிவுசெய்யவும்.

குழுக்களின் லீடர்கள் அட்டைப் பெட்டி அருகே நின்றுகொள்ளவும். அந்தக் குழுவின் அடுத்தவர், சற்றுத் தொலைவில் வட்டம் போட்டு நின்றுகொள்ளவும். அதற்கு அடுத்தடுத்த தூரங்களில் மற்றவர்கள் வட்டம் போட்டு நிற்க, ஐந்தாவது நபர் தரையில் அமர்ந்து இருப்பார். அவர்தான், சார்ட் துண்டுகளை முழுமையாக்குபவர்.

இப்படி, ஒவ்வொரு குழுவும் நின்றுகொள்ள வேண்டும். ‘ஸ்டார்ட்’ சொன்னதும், லீடர்கள் தங்கள் நிறத்துக்கான சார்ட் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து பாஸ் செய்ய வேண்டும். கடைசியில் இருப்பவர், துண்டுகளை இணைத்து முழுமையாக்க வேண்டும்.

ஒரு முறைக்கு ஒரு சார்ட் துண்டுதான் எடுத்துக்கொடுக்க வேண்டும். வட்டத்தைவிட்டு வெளியே வரக் கூடாது. இதை, ஒரு நடுவர் கண்காணிக்கலாம். எந்தக் குழு முதலில் சார்ட் துண்டுகளை முழுமையாக்குகிறதோ, அவர்களே வின்னர்.


தனி ஒருவன்!

கண்ணாமூச்சி விளையாட்டு போலதான் இதுவும். கொஞ்சம் வித்தியாசமானது.

ஒருவரைத் தேர்ந்தெடுத்து, கண்களைக் கட்டி, பிடிக்கச் சொல்ல வேண்டும். அவரிடம் முதலில் பிடிபட்டவரும் கண்களைக் கட்டிக்கொள்ள, இருவரும் மற்றவர்களைப் பிடிக்க வேண்டும்.

கடைசியில் ஒருவர் மிஞ்சுவார். அவரைப் பிடிக்கும் வரை விளையாட வேண்டும்.

பிடிப்பவரின் எண்ணிக்கை கூடக்கூட மிஞ்சியவர்களுக்குப் பிடிபடாமல் இருப்பதில் சவால் அதிகரிக்கும். அதே போல, கண்களைக் கட்டிக் கொண்டவர்களே ஒருவரை ஒருவர் பிடித்துக்கொள்வதும் தடுமாறுவதும் சுவாரஸ்யமாக இருக்கும்.

முக்கியமான விஷயம், போக்குக் காட்டி செல்பவர்கள், குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயேதான் இருக்க வேண்டும். தாண்டி சென்றுவிடக் கூடாது.


ரெயின்போ ரூம்!

கலர்ஃபுல்லான பெரிய அறை தேவை. ஒரு நடுவர், கண்களைப் பொத்தும் ஒருவர் மற்றும் பங்கேற்பாளர்கள் ஏழு பேர் வேண்டும்.

அறையின் நடுவே வட்டம் போடுங்கள். அதில், கண்காணிப்பாளர் நிற்க வேண்டும். அந்த வட்டத்தைச் சுற்றி ஏழு வட்டங்களைப் போட்டு, அதில் வானவில்லின் ஒவ்வொரு நிறத்தையும் எழுத வேண்டும்.

கண்களைப் பொத்துபவர், ஒவ்வொருவரின் கண்களையும் கைகளால் பொத்தி அழைத்து வந்து, ஒவ்வொரு வட்டத்திலும் நிறுத்த வேண்டும். அனைவரையும் வரும் வரை யாரும் கண்களைத் திறக்கக் கூடாது. இதைக் கண்காணிப்பு நடுவர் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பிறகு, ‘ஸ்டார்ட் ரெயின்போ ரூம்’ என்றதும், கண்களைத் திறந்து, தாங்கள் நிற்கும் வட்டத்தில் இருக்கும் நிறத்தின் பெயரைப் படிக்க வேண்டும். அந்த நிறமுடைய பொருள், அறையில் எங்கே இருக்கிறது எனப் பார்த்து, ஓடிச்சென்று தொட்டுவிட்டுத் திரும்ப வேண்டும். யார் கடைசியில் வருகிறார்களோ, அவர்கள் அவுட். மற்ற ஆறு பேரையும் மீண்டும் அதே போல கண்களைப் பொத்தி அழைத்து வந்து, வட்டங்களை மாற்றி நிறுத்த வேண்டும். கடைசியில் மிஞ்சுபவர் வின்னர்.


சுத்தோ சுத்து!

பங்கேற்பவர்கள், சற்றே இடைவெளிவிட்டு நின்றுகொள்ள வேண்டும். ஒரு பேனாவையும் பேப்பரையும் கையில் வைத்துக்கொள்ளவும். எல்லோருக்கும் மையமாக நடுவர் நிற்பார்.

நடுவர், ‘ஸ்டார்ட்’ சொன்னதும், எல்லோரும் மேலே பார்த்தவாறு பூமியைப் போல தன்னைத்தானே சுற்றிக்கொள்ள வேண்டும்.

அப்போது, நடுவர் சொல்லும் சொற்களை, சுற்றியவாறே ஒன்றின் கீழ் ஒன்றாக பேப்பரில் எழுத வேண்டும்.

‘ஸ்டாப்’ சொன்னதும் நிறுத்த வேண்டும். சொற்களை யார் எல்லாம் நேர்கோட்டில் எழுதி இருக்கிறார்களோ, அவர்கள் வெற்றியாளர்.


அண்ணே… யானை அண்ணே!

பரபரப்பு, விறுவிறுப்பு, சுறுசுறுப்பு சேர்ந்த ஜாலி விளையாட்டு.

வெள்ளை சார்ட்டை உள்ளங்கை அளவுக்கு துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள். அவற்றில், பங்கேற்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மான், முயல் போன்ற சிறிய தாவர விலங்குகளின் பெயர்களையும், ஊண் விலங்குகளான சிங்கம் மற்றும் புலி பெயரை தலா ஒன்று எழுதிக்கொள்ளுங்கள். ஒரு யானை பெயரும் இருக்க வேண்டும்.

நடுவராக இருக்கும் ஒருவர்தான் இங்கே யானை. அவர், தரையில் குறிப்பிட்ட இடைவெளியில் ஆங்காங்கே வட்டம் போட்டு, அந்த அட்டைத் துண்டுகளைப் பெயர் தெரியாதபடி திருப்பிவைத்துவிட வேண்டும். யானை அட்டை மட்டும் அவரிடம் இருக்கும். அவர், எல்லோருக்கும் மையமாக நின்றுகொள்வார்.

எல்லாவற்றையும் வைத்த பிறகு, ‘ஸ்டார்ட்’ சொன்னதும், ஒவ்வொருவராகச் சென்று அட்டை உள்ள வட்டத்தில் நிற்க வேண்டும். தங்கள் அட்டைகளை எடுத்துப் பார்க்க வேண்டும்.

சிங்கம், புலி அட்டைகள் வைத்திருப்பவர்கள் வேட்டை உயிரினங்கள். முயல், மான் அட்டைகள் வைத்திருப்பவர்கள், அவர்களிடம் சிக்காமல், யானையிடம் செல்வதுதான் விளையாட்டு.

அவர்கள் தங்கள் வட்டத்தை விட்டு வெளியேறி, யானையைத் தொடுவதற்குள் சிங்கமோ, புலியோ பிடித்துவிட்டால், அவுட். யானையிடம் சென்றுவிட்டால், வின்னர்.

நேரடியாக யானையிடம் செல்ல முடியாமல், இன்னொரு மான் அல்லது முயல் அருகே சென்று புலியோ, சிங்கமோ தொடும் முன்பு அவர்களைத் தொட்டுக்கொண்டு நிற்கலாம்.

குறிப்பிட்ட நேரத்துக்குள் எல்லோரும் யானையிடம் சென்றுவிட வேண்டும். நேரம் கடந்துவிட்டால், மிச்சம் இருப்பவர்கள் புலி, சிங்கத்துக்கு இரையாக வேண்டும்.

சிங்கம் மற்றும் புலியாக இருப்பவர்கள், ஒருவரை விரட்டிச் சென்று பிடிக்க முடியாமல் போனால், மீண்டும் தங்கள் வட்டத்தில் வந்து நின்றுவிட வேண்டும். முயல் அல்லது மான் வட்டத்தின் அருகிலேயே நிற்கக் கூடாது.


வானம், நிலம், நீர்!

பங்கேற்பவர்கள் அனைவரும் இடைவெளிவிட்டு வட்டமாக நின்றுகொள்ள வேண்டும். நடுவராக ஒருவர் அனைவருக்கும் மையமாக நிற்பார்.

வானில் பறக்கும் பறவைகள், நிலத்தில் ஓடும் விலங்குகள், நீரில் வாழும் உயிரினங்கள் ஆகியவற்றின் பெயர்களை, நடுவர் மாற்றி மாற்றிச் சொல்வார்.

உடனே பங்கேற்பாளர்கள், அதற்கேற்ப தங்கள் ஆக்‌ஷனை மாற்றிக்கொள்ள வேண்டும். காகம் என்றால், இரண்டு கைகளையும் விரித்துப் பறப்பது போல செய்ய வேண்டும். சிங்கம் என்றால், உடலைச் சற்றே குனிந்து ஓடுவது போல செய்ய வேண்டும். திமிங்கிலம் என்றால், தரையில் படுத்து நீந்துவது போல செய்ய வேண்டும்.

நடுவர் சொன்ன சில நொடிகளில் செய்ய வேண்டும். ஆக்‌ஷனை தவறாகச் செய்பவர்கள், ஆக்‌ஷனில் கடைசியாகப் பங்கேற்பவர்கள் ஆட்டத்தில் இருந்து விலக்கப்படுவார்கள்.

இவ்வாறு ஒவ்வொருவராக குறையக் குறைய கடைசியில் மிஞ்சுபவரே வெற்றியாளர்.


துப்பறியும் புலி!

சினிமாக்களில் துப்பறியும் ஹீரோவை, வில்லன் கும்பல் கண்களைக் கட்டி, தங்கள் தலைவன் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டுத் திரும்ப அழைத்து வருவார்கள். ஹீரோ, தனது துப்பறியும் திறமையால் மீண்டும் அந்த இடத்துக்குப் போவார். அதுபோல உங்களையும் துப்பறியும் புலியாக்கும் விளையாட்டு இது.

ஒருவரின் கண்களைக் கட்ட வேண்டும். ஹால், படுக்கை அறை, கிச்சன் எனப் பல இடங்களுக்கு மாற்றி மாற்றிப் பொறுமையாக அழைத்துச் செல்ல வேண்டும்.

சுவரையோ, போகும் வழியில் உள்ள பொருட்களையோ, கண்கள் கட்டப்பட்டவர் தொடக் கூடாது. மின்விசிறியின் சத்தம், தரையில் தட்டுப்பட்ட விரிப்புகள் ஆகியவைதான் க்ளூ. அவ்வாறு சென்றுவிட்டு, பழைய இடத்துக்குத் திரும்பியதும், கண் கட்டை அவிழ்த்துவிட வேண்டும்.

தான் அழைத்துச் செல்லப்பட்ட இடங்களைக் கணித்து வரிசையாகச் செல்ல வேண்டும். எந்த அளவுக்குச் சரியாகச் செல்கிறார் என்பதைப் பொறுத்து, அவரை துப்பறியும் புலி எனச் சொல்லலாம்.


முதுகில் இருப்பவர் யார்?

ஒரு நடுவர், வெள்ளைத் துண்டுத்தாள் ஒவ்வொன்றிலும் ஒரு பிரபலத்தின் பெயரை எழுத வேண்டும். அதை, பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரின் முதுகிலும் ஒட்ட வேண்டும்.

தன் முதுகில் எந்தப் பிரபலத்தின் பெயர் உள்ளது எனக் கண்டுபிடிப்பதே போட்டி. மற்ற பங்கேற்பாளர்களிடம் முதுகைக் காண்பித்து, அந்தப் பிரபலத்தின் பெயரைத் தவிர, வேறு கேள்விகள் கேட்க வேண்டும். (அவர் விளையாட்டு வீரரா?, கிரிக்கெட்டில் இருப்பவரா?, இந்தியரா?) அதற்கு எதிரில் இருப்பவர், எஸ் அல்லது நோ மட்டுமே சொல்ல வேண்டும். அதேபோல, நீங்களும் மற்றவர்களுக்கு எஸ் அல்லது நோ பதிலையே சொல்ல வேண்டும்.

ஒருவரிடமே கேள்விகளைக் கேட்காமல், வேறு வேறு பங்கேற்பாளர்களிடமும் கேட்கலாம். இதன் மூலம், தனது முதுகில் உள்ள பெயரை யார் முதலில் கண்டுபிடிக்கிறார்களோ, அவர் வின்னர். கண்டுபிடித்தவர் நகர்ந்துவிட வேண்டும். அவரிடம் யாரும் எதுவும் கேட்கக் கூடாது.

எத்தனை பேர் பங்கேற்கிறார்களோ, அத்தனை பேரும் வெற்றியாகும் வரை விளையாடலாம். ஆட்கள் குறையக் குறைய பரபரப்பு அதிகம் ஆகும்.


பூதத்தின் புதையல்!

எவ்வளவு நபர்கள் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். உங்களில் ஒருவர், பூதம். அந்தப் பூதத்தின் காலின் கீழ் ஒரு புதையல் பெட்டி இருக்கும். அதை, மற்றவர்கள் எடுக்க வேண்டும்.

அனைவரும் பூதத்திடம் இருந்து தள்ளி, ஒரு கோட்டில் நிற்க வேண்டும். பூதம், ‘ஸ்டார்ட்’ சொல்லி உங்களுக்கு முதுகு காட்டியவாறு நடக்க ஆரம்பிக்கும். அனைவரும் அந்தப் புதையலை நோக்கி முன்னேற வேண்டும்.

பூதம் திடீர் எனத் திரும்பிப் பார்க்கும். அப்படிப் பார்க்கும்போது அசையாமல் நின்றுவிட வேண்டும். யாரேனும் நடந்தாலோ அல்லது அசைந்தாலோ, அவர்கள் ஆட்டத்தில் இருந்து வெளியேற, மற்றவர்கள் முதலில் இருந்து நடக்க வேண்டும். யாரும் அசையாவிட்டால், நின்ற இடத்திலிருந்தே மீண்டும் நடக்கலாம்.

யார் முதலில் புதையல் பெட்டியை எடுக்கிறார்களோ, அவர்கள் வின்னர். முதலில் ஆட்டத்தில் இருந்து வெளியேறியவர், அடுத்த ஆட்டத்துக்கு பூதமாக வேண்டும்.


படங்களைச் சேகரி!

செய்தித்தாள்களில் இருந்து விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களின் படங்களைச் சேகரித்து, ஒர் அட்டைப் பெட்டியில் போட்டுக்கொள்ளுங்கள்.

பொருட்கள் அதிகம் இல்லாத விசாலமான ஹால் அல்லது வெளி வராண்டாவில் நின்றுகொள்ளுங்கள். கண்களை மூடி, அட்டைப் பெட்டியில் இருந்து ஆளுக்கு ஒரு படத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு என்ன படம் வருகிறதோ, அந்தத் துறை சம்பந்தமான ஆட்களின் படங்களைத்தான் நீங்கள் சேகரிக்கப்போகிறீர்கள்.

‘ரெடி, ஸ்டெடி’ என்றதும் அட்டைப் பெட்டியை நன்றாகக் குலுக்கி, அதில் இருக்கும் படங்களை அந்த ஹால் முழுவதும் சிதறவிடுங்கள்.

‘ஸ்டார்ட், கலெக்ட்’ என்றதும், குறிப்பிட்ட நேரத்துக்குள் உங்களுக்கான படங்களைச் சேகரிக்க வேண்டும். நீங்கள் சேகரித்த படங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மதிப்பெண். மீண்டும் கண்களை மூடி, படங்களை எடுத்து குலுக்கிப்போட்டு, என எத்தனை ஆட்டம் வேண்டுமென்றாலும் விளையாடலாம்.

முடிவில், யார் அதிகப் படங்களைச் சேகரிக்கிறார்களோ, அவர்களே வின்னர். ஒரே துறையைச் சேர்ந்தவர்களின் படம், இரண்டு மூன்று பேருக்கு வந்துவிட்டால், சவால் அதிகம் இருக்கும். உங்களின் வேகம், சாமர்த்தியத்தைப் பொருத்து பாயின்ட் கிடைக்கும்.


ஞாபகம் வருதா? ஞாபகம் வருதா?

எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம். எல்லோரிடமும் ஒரு வெள்ளைத்தாளும் பேனாவும் கொடுக்க வேண்டும்.

ஒரு பெரிய ட்ரேயை எடுத்து, வெவ்வேறு சிறிய பொருட்களை (குறைந்தது 25 பொருட்கள்) நிரப்பவும். அனைத்தும் பார்ப்பவருக்குத் தெளிவாக தெரியும்படி இருக்க வேண்டும்.

அந்த ட்ரேயைத் துணியால் மூடிவிடுங்கள். மேஜை மீது வைத்து ‘ஸ்டார்ட்’ சொல்லித் திறந்துகாட்டுங்கள். ஒரு நிமிடம்தான் அவகாசம். மீண்டும் மூடிவிட்டு, ‘ரைட்டப்’ எனச் சொல்ல வேண்டும்.

அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட தாளில், என்னவெல்லாம் பார்த்தார்கள் என எழுத வேண்டும். இதற்கு மூன்று நிமிடங்களே அவகாசம். ‘ஸ்டாப்’ சொன்னதும் நிறுத்திவிட்டு, நடுவரிடம் கொடுத்துவிட வேண்டும்.

யார் அதிகமான பொருட்களை எழுதுகிறாரோ, அவரே வின்னர்.


பிங் பாங்க்!

எவ்வளவு பேர் இருக்கிறார்களோ, அவ்வளவு ஜாலியாகப் போகும் இந்த விளையாட்டு.

அனைவரும் வட்டமாக அமர்ந்து, உங்கள் பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும். உதாரணமாக, உங்களில் வர்ஷா, நவீன், ராம், தினேஷ் என இருந்தால், வர்ஷா பெயர் நவீனுக்கும், நவீன் பெயர் ராமுவுக்கும் மாற வேண்டும்.

இப்போது, ஒருவர் ‘பிங்’ எனக் கூற வேண்டும். அவருக்கு இடது பக்கத்தில் உள்ளவர், ‘பாங்க்’ எனக் கூற வேண்டும். பாங்க் கூறியவரின் இடது பக்கத்தில் உள்ளவர், கூட்டத்தில் ஒருவரின் பெயரைச் சொல்ல வேண்டும். யாருக்கு அந்தப் பெயர் சூட்டப்பட்டதோ, அவர் ‘பிங்’ எனக் கூற வேண்டும். அவருக்கு அடுத்து உள்ளவர், ‘பாங்க்’ எனக் கூற வேண்டும். இப்படியே விளையாட வேண்டும்.

பெயருக்கு உண்மையான சொந்தக்காரர் மறந்துபோய் ‘பிங்’ எனச் சொன்னாலோ, பெயர் சொல்பவர் தனக்கு சூட்டப்பட்ட பெயரையே சொன்னாலோ அவுட். ஐந்து முறை அவுட் ஆகுபவர், ஆட்டத்தில் இருந்து விலக்கப்படுவார். விலக்கப்படுபவருக்கு சூட்டிய பெயரைச் சொன்னாலும் அவுட்தான்.


அசையும் அருங்காட்சியகம்!

அருங்காட்சியகம் என்றால், அனைத்தும் ஓரிடத்தில் அசையாமல் காட்சிதரும். ஆனால், இங்கே அசைந்தால்தான் விளையாட்டே. இந்த விளையாட்டை நான்கு பேருக்கு மேல் விளையாடலாம்.

‘சா பூ த்ரி போட்டு’ உங்களில் ஒருவரை அருங்காட்சியகத்தின் காப்பாளராக மாற்றிவிடுங்கள். மற்ற அனைவரும் மியூசியம் விலங்குகள்.

காப்பாளர் 1 முதல் 5 எண்ணி முடிப்பதற்குள் அறைக்குள் முழுவதுமாகப் பரவி, விலங்குகள் போல ஆங்காங்கே போஸ் கொடுத்து, அசையாமல் நிற்க வேண்டும்.

காப்பாளர் ஒவ்வொருவரின் அருகிலும் வந்து செல்வார். அவர், உங்களைப் பார்க்காதபோது, அசைந்து போஸை மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஒருவர் அசையும்போது, காப்பாளர் திரும்பிப் பார்த்துவிட்டால், அவுட். அப்படி அவுட் ஆகும் நபர், காப்பாளராக மாற வேண்டும். மீண்டும் 1 முதல் 5 எண்ணுவதற்குள் அனைவரும் வேறு இடம் மாற வேண்டும்.

விலங்குகளாக இருப்பவர்களின் அருகில் வந்து பார்க்கும் காப்பாளர், யாரையும் தொடக் கூடாது. விலங்குகளின் முகமூடியையும் அணிந்துகொண்டு விளையாடினால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.


கூண்டுக்குள்ளே யாரு?

நீங்கள் ஓர் உயிரியல் பூங்காவுக்குப் போகிறீர்கள். அங்கே, கூண்டுக்குள் விலங்குகளாக இருக்கும் நண்பர்களை, உங்கள் அறிவால் விடுதலை செய்ய வேண்டும்.

நடுவராக இருப்பவர், உங்கள் நண்பர்களின் காதில் ஒரு விலங்கின் பெயரைச் சொல்லிவிடுவார். அவர்கள், கூண்டில் இருப்பது போல ஆங்காங்கே சென்று நின்றுகொள்வார்கள்.

நீங்கள் ஒவ்வொரு கூண்டின் அருகிலும் செல்ல வேண்டும். அந்த நண்பர், அந்த விலங்கின் செய்கையைச் செய்வார். (உதாரணம்: ஒட்டகச்சிவிங்கி என்றால், கழுத்தை உயர்த்தி, இலையைச் சாப்பிடுவது போல செய்யலாம். சிங்கம் என்றால், கம்பீரமாக நடப்பது போல. ஆனால், கத்தக் கூடாது). சரியாகச் சொன்னால், நண்பருக்கு கூண்டில் இருந்து விடுதலை. தவறான பெயரைச் சொன்னால், அடுத்தவரிடம் சென்றுவிட வேண்டும்.

குறிப்பிட்ட நேரத்துக்குள் எத்தனை விலங்குகளை விடுதலை செய்கிறீர்கள் என்பதே சவால்.


பந்தைத் தள்ளு… மதிப்பெண் அள்ளு!

வெவ்வெறு நிறங்களில் பிளாஸ்டிக் பந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

தரையில் ஒரு வட்டம் போட்டு, அதில் பந்துகளை நெருக்கமாக வைத்துவிட்டு, குறிப்பிட்ட தூரத்தில் அமர்ந்துகொள்ளவும்.

துண்டுச் சீட்டுகளில் அந்தப் பந்துகளின் நிறங்களைத் தனித் தனியாக எழுதி, மடித்துக்கொள்ளவும்.

சீட்டுகளைக் குலுக்கிப் போட்டு, ஆளுக்கு ஒன்று எடுத்து பிரித்துப் பார்க்கவும். யாருக்கு எந்த நிறச் சீட்டு வருகிறதோ, அந்த நிறப் பந்தை வாயால் ஊதி, வட்டத்தில் இருந்து வெளியே வரவைக்கவும்.

உங்கள் பந்து வெளியே வந்தால், 10 மதிப்பெண். வேறு நிறப் பந்து வந்தால், அந்த 10 மதிப்பெண் அவருக்குப் போய்விடும். இரண்டு பந்துகள் வந்துவிட்டால், உங்களுக்கு 5, அவருக்கு 5 மதிப்பெண்கள்.

ஒருவர் விளையாடி முடித்து அடுத்தவர் விளையாடும்போது, வெளியே வந்துவிட்ட பந்தையும் வட்டத்திலேயே வைத்துவிட வேண்டும். அதாவது, எல்லா நேரத்திலும் எல்லாப் பந்துகளும் வட்டத்தில் இருக்க வேண்டும்.

இப்படி எத்தனை ஆட்டங்களையும் ஆடலாம். முடிவில் மதிப்பெண்களை கூட்டுங்கள். அதிக மதிப்பெண் பெற்றவர் வெற்றியாளர்.


பெயர்களை உருவாக்குவோம்!

குழுக்களாக விளையாடும் விளையாட்டு இது. ஒவ்வொரு குழுவிலும் மூன்று பேர் இருந்தால் போதும்.

செய்தித்தாள்களில் வரும் தலைப்புச் செய்திகளின் ஒவ்வொரு எழுத்தையும் தனித்தனியாக, கத்தரித்துக்கொள்ளுங்கள். இது போல ஒவ்வொரு குழுவும் நிறைய எழுத்துகளை வைத்திருக்க வேண்டும்.

பழங்கள், காய்கள், நிறங்கள், பறவைகள், விலங்குகள் எனப் பல்வேறு தலைப்புகளில் துண்டுச் சீட்டுகளில் எழுதி, மடித்துக்கொள்ளுங்கள்.

துண்டுச் சீட்டைக் குலுக்கிப் போட்டு எடுக்க வேண்டும். யாருக்கு என்ன தலைப்பு வருகிறதோ, அதற்கேற்ப எழுத்துகளைத் தரையில் வைத்துப் பெயர்களை உருவாக்க வேண்டும். (உதாரணம்… பழங்கள் என்றால், மாம்பழம், மாதுளை, வாழைப்பழம், அன்னாசி).

5 நிமிடங்கள் என நேரத்தை நிர்ணயித்துக்கொள்ளுங்கள். நேரம் முடிந்ததும் எத்தனை பெயர்களை உருவாக்கினீர்களோ, அத்தனை மதிப்பெண்.

மீண்டும் சீட்டுகளைக் குலுக்கிப்போட்டு, வேறு தலைப்புகளுக்கு பெயர்களை உருவாக்க வேண்டும். இப்படியே விளையாடி, இறுதியில் அதிக மதிபெண் எடுக்கும் குழு வின்னர்.


இன்னும் சில விளையாட்டுகள்!

உட்கார்ந்த இடத்திலேயே உங்கள் பொது அறிவுக்கும், கற்பனைத்திறனுக்கும் வேலை தரும் சில விளையாட்டுகளை ஜாலியாக விளையாடலாம்.

கதை எக்ஸ்பிரஸ்!

10 பேர் இருந்தால் சுவாராஸ்யமாக இருக்கும். ஒரு A4 பேப்பரும், பேனாவும் போதும். முதலில் இருப்பவர், ஒரு கதையை யோசித்து, இரண்டு வரிகள் எழுத வேண்டும். அடுத்தவரிடம் கொடுக்க, அவர் அதற்குப் பொருத்தமாக தனது கற்பனையில் அடுத்த இரண்டு வரிகளை எழுத வேண்டும். இப்படியே ஒவ்வொருவராக எழுதி, கதையை உருவாக்க வேண்டும். இடையில் தாங்கள் மனதில் நினைத்திருந்த கதையைப் பற்றியோ, அடுத்த வரிகளைப் பற்றியோ பேசிக்கொள்ளக் கூடாது. கதை முடிந்த பிறகு, விவாதித்துக்கொள்ளலாம்.

நியூஸ் பேப்பர் ஜீனியஸ்!

ஒரு நாளின் செய்தித்தாளை எடுத்துக்கொள்ளவும். எல்லோரும் அதை ஒரு முறை புரட்டிப் படித்துவிட வேண்டும். பிறகு, பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு தாளில் 10 கேள்விகளை எழுத வேண்டும். அதற்கான பதில், அந்தச் செய்தித்தாளில் இருக்க வேண்டும். பிறகு, தாங்கள் எழுதிய வினாக்களை ஒருவருக்கு ஒருவர் மாற்றிக்கொண்டு, விடை எழுத வேண்டும். நடுவர் இவற்றைக் கண்காணித்து மதிப்பெண் போட வேண்டும்.

புத்தகத்தில் தேடிப் பிடி!

ஆளுக்கு ஒரு புத்தகம் (கதைப் புத்தகம் அல்லது பாடப் புத்தகம்) எடுத்துக்கொள்ளவும். ஸ்டார்ட் சொன்னதும், அடுத்தவருக்கு காண்பிக்காமல் பக்கங்களைப் புரட்டி, ஏதாவது ஒரு பக்கத்தின் ஒரு வரியை அல்லது வார்த்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டும். ரெடி சொன்னதும், ஒருவருக்கு ஒருவர் புத்தகத்தை மாற்றிக்கொண்டு, அந்த வார்த்தையைச் சொல்ல வேண்டும். புத்தகம் பெற்றவர், அந்த வார்த்தையைக் கண்டுபிக்க வேண்டும். அப்படிக் கண்டுபிடித்தவர், அந்தப் பக்கத்தைத் தரையில் விரித்துவைத்து, ‘வின்’ எனச் சொல்ல வேண்டும். முதலில் கண்டுபிடித்தவருக்கு 10 மதிப்பெண், அடுத்து கண்டுபிடிப்பவருக்கு 5 மதிப்பெண், மூன்றாம் ஆளுக்கு 3 என மதிப்பெண் போட்டு, தொடர்ந்து பல முறை விளையாடலாம்.

சூப்பர் குறுக்கெழுத்து!

ஒரு வெள்ளைத்தாளில் குறுக்கெழுத்து போல கட்டங்களைப் போட்டுக்கொள்ளுங்கள். ஆட்டத்தை ஆரம்பிப்பவர், முதல் கட்டத்தில் ஒரு எழுத்தை எழுத வேண்டும். (உதாரணம்; ‘அ’ அல்லது ‘க’). அடுத்து ஒருவர், அந்த எழுத்துக்கு அடுத்து (வலமிருந்து இடம் அல்லது மேலிருந்து கீழ்) ஓர் எழுத்தை எழுத வேண்டும். (உதாரணம்: ம்). மூன்றாம் நபர் அடுத்த எழுத்தை எழுத வேண்டும்.

இப்படி எழுதும்போது, ஒரு வார்த்தை உருவாகிவிட்டால், கடைசியாக எழுதியவர், அடுத்த கட்டத்தை முழுவதும் வண்ணப் பேனாவால் பிளாக் செய்துவிட வேண்டும். அந்த வார்த்தைகளுக்கு ஏற்ப மதிப்பெண் (அம்மா என்றால் 3, அற்புதம் என்றால் 5) அவருக்கு கிடைக்கும். பிறகு, வார்த்தையை முடித்தவர், பிளாக் செய்த கட்டத்துக்கு அடுத்த கட்டத்தில் இருந்து எழுத ஆரம்பிக்க வேண்டும். இப்படி, மொத்தக் கட்டங்களும் முடியும் வரை விளையாடலாம். ஆங்கிலத்திலும் விளையாடலாம். தமிழ் என்றால், தொடங்கும் முதல் எழுத்து, உயிர் அல்லது மெய்யெழுத்தாக இருக்க வேண்டும்.

கோடு போடு… ஓவியமாக்கு!

சில துண்டுச் சீட்டுகளில் விலங்கு, பறவை, இயற்கை, வாகனம், கட்டடம் என எழுதி, மடித்துக்கொள்ள வேண்டும். பங்கேற்பவர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு வெள்ளைத்தாளை எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றில் ஒரே மாதிரி கோடு போட்டுக்கொள்ள வேண்டும். பிறகு, துண்டுச் சீட்டுகளைக் குலுக்கி, ஒரு சீட்டை எடுக்க வேண்டும். அதில் வரும் பெயருக்கு ஏற்ப, உங்கள் கற்பனைத்திறனால் வெள்ளைத்தாளில் இருக்கும் கோடு ஓவியமாக வேண்டும். விரைவாகவும் அழகாகவும் முடிக்க வேண்டும். ஒரே மாதிரி கோட்டுக்கு ஒவ்வொருவரிடம் இருந்தும் பல ஓவியங்கள் உருவாவது சுவாராஸ்யமாக இருக்கும்.

வார்த்தை பில்டிங்!

வட்டமாக அமர்ந்துகொண்டு, ஒருவர் ஒரு வார்த்தையைத் தாளில் எழுத (உதாரணம்: அம்மா அல்லது Mother), அடுத்தவர் முடிந்த எழுத்தில் இருந்து ஒரு வார்த்தையை எழுத வேண்டும். ஒரு சில நொடிகள்தான் அவகாசம். அருகில் இருப்பவர் எழுதாவிட்டால், அடுத்து இருப்பவர் எழுத வேண்டும். எழுதும் வார்த்தையில் உள்ள எழுத்துகளுக்கு ஏற்ப மதிப்பெண் அளிக்க வேண்டும். இப்படி ஒவ்வொருவரும் எவ்வளவு வார்த்தைகளை உருவாக்குகிறீர்கள் எனப் பார்ப்போம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s